Madurai News

12 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
Wednesday 16, May 2018

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில், 12-ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் மட்டும் புதன்கிழமை (இன்று) வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுசேரி 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 40 ஆயிரத்து 686 பேர் தனிதேர்வர்களாவர்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 304 பள்ளிகளைச் சேர்ந்த 38 ஆயிரத்து 423 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 

மதுரையில் 129 பள்ளிகளைச் சேர்ந்த 19,216 பேரும், மேலூரில் 110 பள்ளிகளைச் சேர்ந்த 11,279 பேரும், உசிலம்பட்டியில் 70 பள்ளிகளைச் சேர்ந்த 7,928 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். மேலும் 1,467 பேர் தனித்தேர்வர்களாவர்.

மேற்கண்ட மதுரை, உசிலம்பட்டி, மேலூர் கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 713 பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவ, மாணவியர் இன்று தேர்வு முடிவை எதிர்பார்த்துள்ளனர். 

இந்த தேர்வானது, கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி, மாதம் மற்றும் வருடத்தை பதிவு செய்து,www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Center) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

இதுமட்டுமன்றி மாணவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளி மாணவர்களுக்கு தாங்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இது தனித்தேர்வர்களுக்கும் பொருந்தும். 

இதையடுத்து வரும் 21ம் தேதி பிற்பகல் தாங்கள் பயின்ற அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது மையத்துக்குச் சென்று தலைமையாசிரியர் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். 

இதனை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் வரும் மே 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இதற்கான கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜுன் மாத இறுதியில் நடைபெறும். 

இதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last