நாளை (செப்.7) நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர்.அகில இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் விலைவாசி உயர்வு, பொதுத் துறைகளில் தனியார் மயமாக்கம், புதிய பென்ஷன் திட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. போராட்டத்திற்கு தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., பணியாளர் சம்மேளனம் போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் போன்றவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அவர்கள் வேலைக்கு செல்லமாட்டார்கள்.
அதேசமயம் மற்ற தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்பது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. அரசு ஊழியர்கள், பணியாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, "வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் நாங்கள் நாளை பணிக்குச் செல்லாமல் "ஆப்சென்ட்' ஆகிவிடுவோம்,' என்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் பல "சீட்'கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளது. போக்குவரத்துத் துறையிலும் வேலை நிறுத்தம் குறித்து சி.ஐ.டி.யூ., அமைப்பின் மதுரை மண்டல பொதுச் செயலாளர் பிச்சையிடம் கேட்டபோது, ""வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார். அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொதுமேலாளர் வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, ""சில சங்கங்களே வேலை நிறுத்ததில் பங்கேற்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தினோம். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பஸ்களை இயக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். பஸ்கள் முறையாக இயங்கும்,'' என்றார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்துத் துறை ஊழியர்களும் பங்கேற்பார்கள்,' என தெரிவித்துள்ளனர்.